மேம்பால இணைப்பு பகுதி சேதம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
வண்டலுார்:வண்டலுார், ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில், சிமென்ட் சட்டங்கள் இடையே உள்ள இணைப்பு விரிவு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ரயில் நிலையம் அருகிலிருந்து, வாலாஜாபாத் சாலை துவங்குகிறது. இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லலாம். வண்டலுார் ரயில் நிலையம் வழியாக புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் அடிக்கடி செல்வதால், ரயில் தண்டவாளத்தை கடந்து, வாலாஜாபாத் சாலைக்குச் செல்ல, வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நின்றன. இதனால், ஜி.எஸ்.டி., சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அடிக்கடி நடந்தன. இதற்கு தீர்வாக, ஜி.எஸ்.டி., சாலையுடன், வாலாஜாபாத் சாலையை இணைக்கும்படி, ரயில்வே மேம்பாலம் கட்ட, 2011ல் 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்தில் 600 மீ., செங்கல்பட்டு -- தாம்பரம் மார்க்கத்தில் 600 மீ., ஜி.எஸ்.டி., சாலை - - வாலாஜாபாத் சாலை இணைப்பிற்கு இருவழி பாதையாக மேம்பாலம் கட்டப்பட்டு, 2012ல் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பாலத்தின், மேல் பகுதி கட்டுமானத்தில், 84 சிமென்ட் சட்டங்கள், இணைப்பாக உள்ளன. இந்த சிமென்ட் சட்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க, இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு சிமென்ட் சட்ட இணைப்புகளில், இரண்டு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகடுகள் உடைந்தன. இதனால், வாகனங்கள் செல்லும் போது, உடைந்த இரும்பு தகடுகள் சிமென்ட் சட்டங்களுடன் மோதியும், உராய்ந்தும் சத்தம் உருவானது. ஒரு மணி நேரத்திற்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாலத்தின் மீது பயணிப்பதால், தொடர்ந்து சத்தம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இது குறித்து பல தரப்பிலிருந்தும், நெடுஞ்சாலைத் துறைக்கு புகார்கள் சென்றன. புகாரின்படி, மேம்பாலத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், உடைந்த இரும்பு தகடுகளை அப்புறப்படுத்தி, புதிய தகடுகளை பொருத்த முடிவு செய்தனர். அதன்படி, இரும்பு தகடுகளை சீர் செய்யும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இப்பணிகள் முடியும் வரை, பாலத்தின் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகள், வேகத்தை குறைத்து கவனமாக செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.