அச்சிறுபாக்கம் - திண்டிவனம் நகர பேருந்து இயக்க கோரிக்கை
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் இருந்து, மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு, ரயில் மற்றும் பேருந்துகளில் வேலைக்கு சென்று வருகின்றனர்.அவ்வாறு, அருகில் உள்ள நகரங்களான திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.இதில், அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு பேருந்துகளான செஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், புதுச்சேரி செல்லும் விரைவு பேருந்துகள் அச்சிறுபாக்கத்தில் நின்று செல்வது இல்லை.தேசிய நெடுஞ்சாலையிலேயே, பேருந்தை நிறுத்தி பயணியரை ஏற்றி செல்வதால், வாகன விபத்துகள் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, பேருந்து நடத்துனர்கள், அச்சிறுபாக்கம் பகுதிகளில் பேருந்துகளை நிறுத்துவதில்லை.இதனால், திண்டிவனம் பகுதிக்கு கல்வி பயில செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர், மிகவும் பாதிப்படைகின்றனர்.மேலும், மதுராந்தகத்தில் இருந்து அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி வரை மட்டுமே, நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியில் உள்ள பாதிரி, ஓங்கூர், கோனேரிக்குப்பம் பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் இல்லை. எனவே, அச்சிறுபாக்கத்தில் இருந்து திண்டிவனம் பகுதிக்கு நகர பேருந்து இயக்கப்பட்டால், இந்த ஊர்களும் பயன் பெறும்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்து, பேருந்து இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.