காவல் நிலைய கட்டடம் கட்ட நிலம் ஒதுக்க கோரிக்கை
செங்கல்பட்டு:காயார், அணைக்கட்டு காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட, வருவாய் துறை நிலம் வழங்க வேண்டு மென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், காயார் காவல் நிலையம், அணைக்கட்டு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு காவல் நிலையங்களுக்கு தனி கட்டடம் இல்லாததால், தற்காலிகமாக அரசு கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இட நெருக்கடி மற்றும் புகார் அளிக்க வருவோருக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால், இவ்விரு காவல் நிலையங்களுக்கும் புதிய கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம், மாவட்ட காவல் துறை நிர்வாகம் மனு அளித்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகியும் நிலம் ஒதுக்கீடு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, போலீசார் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, காவல் நிலையங்கள் கட்ட நிலம் ஒதுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.