உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அங்கன்வாடி மைய கட்டுமான பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

அங்கன்வாடி மைய கட்டுமான பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

சித்தாமூர், சின்னகளக்காடி கிராமத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகளக்காடி கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. நாளடைவில் இந்த கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், இங்குள்ள ஒரு தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த தற்காலிக அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் ஆரம்ப கல்வி படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். ஆனால், இந்த கட்டடத்தில் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாமல், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, கனிம வள நிதியில், 16.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு முன் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய அங்கன்வாடி மைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குழந்தைகளின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !