தனியார் லாரிகள் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை விட அனுமதிக்க வேண்டுகோள்
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து, 51.58 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை பணிகளை 2018ல் துவங்கின.திருப்போரூர் அடுத்த காலவாக்கம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் உந்து நிலையங்கள், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய்கள் புதைக்கும் பணிகள், கான்கிரீட் சாக்கடை தொட்டி அமைக்கும் பணிகள் உட்பட, பல பணிகள் துவக்கப்பட்டன.இதையடுத்து, பணிகள் முடிந்து கடந்த பிப்., 24ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைத்து, செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், கழிவுநீர் கட்டமைப்பு இல்லாத பகுதிகளில், தனியார் கழிவுநீர் லாரிகள் வாயிலாக எடுக்கப்படும் கழிவுநீரை திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் வெளியேற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த கழிவுநீரை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே விட வேண்டும். இதனால், லாரிகளில் கழிவுநீர் எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, மேற்கண்ட காலவாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கட்டணம் செலுத்தி கழிவுநீர் வெளியேற்றுவதற்கான அனுமதியை விரைந்து வழங்கி, செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.