கருங்குழி பேரூராட்சிக்கு பொறியாளர் நியமிக்க கோரிக்கை
மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சியில், நிரந்தர பொறியாளர் நியமிக்கப்படாததால், பேரூராட்சி வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில், பொறியாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த சில மாதங்களாக, திருப்போரூர் பேரூராட்சி பொறியாளர், தற்காலிகமாக கருங்குழி பேரூராட்சியில் பணியாற்றி வருகிறார்.அதனால், பணி நாட்களில் ஒரு சில நாட்கள் மட்டும், இவர் கருங்குழி பேரூராட்சிக்கு வந்து செல்கிறார்.இதன் காரணமாக, கருங்குழி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை, கண்காணிக்க முடியாத சூழல் உள்ளது.மேலும், சம்பந்தப்பட்ட துறை ரீதியான பணிகளை மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்படுகிறது.எனவே, கருங்குழி பேரூராட்சிக்கென பொறியாளரை நியமிக்க, பேரூராட்சி துறை சார்ந்த உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.