உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள்கோவில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க கோரிக்கை

சிங்கபெருமாள்கோவில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க கோரிக்கை

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள பழைய பொது நுாலக கட்டடத்தை இடித்து அகற்றி, புதிய நுாலக கட்டடம் அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண்கள் வாடகைக்கு தங்கி, சுற்றியுள்ள சிப்காட் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர்.இங்கு சந்தைமேட்டு தெருவில், கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.இந்த நுாலகம் 1996ல் கட்டப்பட்டது. இதில் சிறுகதைகள், இலக்கியங்கள், வரலாற்று புத்தகங்கள் என, 40,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவ-, மாணவியர், இல்லத்தரசிகள், 2,500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நுாலக கட்டடம் சாலையை விட, மூன்று அடிகள் தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது.கட்டடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்ததால், சுவர்கள் மற்றும் மேல் தளங்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.மேலும் ஜன்னல் மற்றும் மின் இணைப்புகள் பழுதடைந்து உள்ளன.இது குறித்து வாசகர்கள் கூறியதாவது:நுாலக கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சுவர்களில் ஈரப்பதம் உள்ள போது,'ஷாக்' அடிக்கிறது. கட்டடம் பாழடைந்து உள்ளதால், போட்டி தேர்வுகளுக்கு குறிப்பு எடுக்க வருவோர் அமர்ந்து படிக்க அச்சப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, இதே இடத்தில் புதிதாக அடிப்படை வசதிகளுடன் நவீன நுாலகத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை