வேளாண் விரிவாக்க மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
மதுராந்தகம்:மதுராந்தகத்தில், வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மதுராந்தகம் தாலுகாவில், விவசாயம் மிக முக்கிய தொழிலாக உள்ளது.இப்பகுதி விவசாயிகள், மதுராந்தகம் அய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திற்குச் சென்று, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் இருபொருட்கள் போன்றவற்றை அதிகாரிகளிடம் கேட்டு, அவற்றை செயல்படுத்தி வருகின்றனர்.அதில் மாமண்டூர், பிலாப்பூர், சிதண்டி மண்டபம், மெய்யூர், படாளம், புக்கத்துறை, பழமத்துார், குமாரவாடி, பழையனுார், வையாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 15 கி.மீ., துாரத்தில் உள்ள மதுராந்தகம் வேளாண் விரிவாக்க மையத்திற்கு சென்று, விதை நெல் மற்றும் உரங்களை வாங்கி வந்து பயன்படுத்தினர்.இதையடுத்து, புக்கத்துறை பகுதியில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்க கோரி, விவசாயிகள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.அதன்படி, வேளாண்மை - உழவர் நலத்துறை வாயிலாக, துணை வேளாண்மை விரிவாக்கம் மையம், கடந்த 2022-23ல், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 110 மெட்ரிக் டன் கொள்ளளவில் புதிதாக கட்டப்பட்டது.இந்த துணை வேளாண்மை விரிவாக்க மையம் சுற்றுச்சுவரின், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளதால், விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில், மது பிரியர்களின் கூடாரமாக மாறுகிறது.எனவே, துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், இரவு நேர காவலாளியை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.