அபாய நிலையில் நீர்த்தேக்க தொட்டி இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்
சித்தாமூர்:புத்திரன்கோட்டையில், அபாய நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த புத்திரன்கோட்டை ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு நடுவே, 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. குடிநீர் கிணற்றில் இருந்து, மின்மோட்டார் மூலமாக இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்களில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பின்றி, துாண்களின் சிமென்ட் கலவை பெயர்ந்து உதிர்ந்து, அபாய நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வீடுகளின் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. ஊரக வளர்ச்சித் துறையினர் ஆய்வு செய்து, இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.