சாலை விரிவாக்க பணி இடத்தில் ஒளிரும் பட்டை அமைக்க கோரிக்கை
மறைமலைநகர்:மறைமலைநகர் -- திருக்கச்சூர் சாலை 5 கி.மீ., துாரம் உடையது. இந்த தடத்தில் திருக்கச்சூர், பேரமனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை.இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, மறைமலைநகர் -- பேரமனுார் வரை 3.5 கி.மீ., துாரம் இரண்டு கட்டங்களாக 2023ம் ஆண்டு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன.தற்போது திருக்கச்சூர் -- பேரமனுார் வரை, 1.5 கி.மீ., துாரம் 7 மீட்டர் அகலத்திற்கு சாலை மேம்பாட்டு திட்டம் 2024--25ன் கீழ் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு, 1.4 கி.மீ., இடையே ஐந்து இடங்களில் மழைநீர் செல்லும் பெட்டி வடிவ ஐந்து சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.சாலை விரிவாக்க பணிகளுக்காக இந்த பகுதியில் இடையூறாக இருந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டன. தற்போது இந்த பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.புதிதாக இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், தடுமாறி வருகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன், சாலைப் பணிகள் நடைபெறும் இந்த பகுதியில், இரவில் ஒளிரும் பட்டைகள் மற்றும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.