உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கச்சூர் பகுதியில் மேம்பால இறக்கத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க கோரிக்கை

திருக்கச்சூர் பகுதியில் மேம்பால இறக்கத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்: திருக்கச்சூர் பகுதியில், மேம்பாலம் இறக்கத்தில் விபத்து அபாயம் நிலவுவதால், இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன. மேலும் திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இங்கு ரயில்வே சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருக்கச்சூர் ஆபத்து கால்வாய் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் துவக்க பகுதியில், சாலை அகலமாக உள்ளது. இதனால், வேகமாக வரும் கனரக வாகனங்களால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது. எனவே, திருக்கச்சூர் பகுதியில், மேம்பால இறக்கத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: மேம்பாலம் திறக்கப்பட்டதில் இருந்து, திருக்கச்சூர் பகுதியில் அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. மேம்பால இறக்கத்தில் அனைத்து பக்கங்களில் இருந்தும் வாகனங்கள் வேகமாக வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் குழப்பமடைந்து, இங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறன. குறிப்பாக, தெள்ளிமேடு செல்லும் அணுகு சாலையில் வாகனங்கள் அதிவேகமாகவும், எதிர் திசையிலும் இயக்கப்படுகின்றன. கடந்த வாரத்தில் கூட, வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை மையத்தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. எனவே, திருக்கச்சூர் பகுதி மேம்பால இறக்கத்தில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, இரும்பு தடுப்புகள் அமைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். திருக்கச்சூர் பகுதியில் உள்ள மேம்பால இறக்கத்தில் பள்ளி குழந்தைகள், பெண்கள், முதியோர் என, பலதரப்பட்ட மக்கள் கடந்து சென்று வருகின்றனர். அப்போது, வேகமாக வரும் வாகனங்களால் சாலையைக் கடக்க முடியாமல் தவிக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து, விபத்து அச்சத்துடன் சாலையைக் கடக்கின்றனர். இந்த பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ப.மணிகண்டன், சிங்கபெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை