ரயில் நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறைகளை திறக்க கோரிக்கை
மறைமலை நகர்,:காட்டாங்கொளத்துார் ரயில் நிலையத்தை, சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு இருந்து மின்சார ரயில்கள் வாயிலாக, தினமும் சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, ஆயிரக்கணக்கான பயணியர் வேலைக்கு சென்று வருகின்றனர்.இந்த ரயில் நிலையத்தில், பயணியர் வசதிக்காக ரயில் நிர்வாகம் சார்பில் கழிப்பறை கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக பூட்டியே இருந்த நிலையில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில், புதிதாக இருபாலர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என, நவீன கழிப்பறை கட்டப்பட்டது.இந்த இரண்டு கழிப்பறை கட்டடங்களும், பல ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதோடு, தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி உள்ளது. இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர், இயற்கை உபாதை கழிக்க வசதியின்றி அவதிப்படுகின்றனர்.இது குறித்து பயணியர் கூறியதாவது:சென்னை புறநகர் பகுதிகளில், ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறை பூட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவியர் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, பயணியர் நலன் கருதி, பூட்டி வைக்கப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.