புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர், பழைய காலனி பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், பயன்பாட்டிற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 2020 - 21ல், 5.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பறை கட்டுமான பணிகள் முடிந்து, ஐந்து ஆண்டுகள் கடந்தும், இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், மூடியே உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, திறந்தவெளி பகுதிகளை பயன்படுத்துகின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவுற்றும் மூடப்பட்டிருக்கும் கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.