புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
மேல்மருவத்துார்:கீழ்மருவத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், புதுப்பித்தல் பணி முடிந்த கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்மருவத்துார் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழ்மருவத்துாரில் இருந்து வெங்கடேசபுரம் பகுதிக்குச் செல்லும் சாலையோரம், கிராம மக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்திற்குள் கழிப்பறை, குளியலறை மற்றும் துணி துவைக்கும் கல் ஆகியவை உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கழிப்பறை பழுதடைந்து பயன்பாடின்றி இருந்தது. அதனால், 15வது மாநில நிதிக்குழு திட்டம் 2021 -- 22ன் கீழ், 2 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப் பட்டது. ஆனால், பணிகள் முடிவுற்று இரண்டு ஆண்டுகளாகியும், கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள், முதியோர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்ட இந்த சுகாதார வளாகத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.