செங்கேணியம்மன் கோவில் குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டுகோள்
மறைமலை நகர்:செட்டிபுண்ணியம் ஊராட்சியில் உள்ள செங்கேணியம்மன் கோவில் குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டிபுண்ணியம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில், பழமையான செங்கேணியம்மன் கோவில் அருகில், குளம் உள்ளது.பல ஆண்டுகளாக இந்த குளம் துார் வாரப்படாமல் உள்ளதால், சுற்றியுள்ள கருங்கற்களால் ஆன கரைகள் சரிந்து, குளத்தில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மழைக்காலங்களில், அருகில் உள்ள ஏரியில் இருந்து உபரி நீர் வரும் பாதைகள் முறையாக இல்லாததால், குளம் முழுமையாக நிரம்புவதில்லை.இதன் காரணமாக, நிலத்தடி நீரின் அளவு குறைந்து, தண்ணீரின் சுவையும் மாறுவதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.எனவே, இந்த குளத்தை துார் வாரி, கரைகளை புதுப்பிக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.