மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியை சீரமைக்க வேண்டுகோள்
சித்தாமூர்:கோட்டைபுஞ்சை கிராமத்தில், சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியை சீரமைக்க வேண்டுமென, கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.சித்தாமூர் அருகே இந்தலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைபுஞ்சை கிராமத்தில், 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு, குடிநீர் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, தினசரி குழாய்கள் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை துாய்மைப்படுத்த அமைக்கப்பட்டு உள்ள இரும்பு ஏணி பராமரிப்பின்றி, கடந்த மூன்று ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது.இதனால், மேலே ஏறி தொட்டியை துாய்மைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீரில் பாசி படர்ந்து, கிராமத்தினருக்கு பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது.எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டி ஏணியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.