புதிதாக ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி, காட்டாங்கொளத்தூர் அடுத்த செந்தமிழ் நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி வளர்ந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் ரேஷன் கடை அருகே இல்லாததால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்க, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, 2 கி.மீ., தூரம் வரை செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெண்கள், முதியவர்கள் பொருட்களை நீண்ட தூரம் சுமந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:ரேஷன் கடை அருகே இல்லாததால், கடை திறக்கும் நேரம் முறையாக தெரிவதில்லை. மேலும், ரயில்வே கேட்டை கடந்து செல்லும் நிலை உள்ளதால், கேட் மூடப்படும் போது காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த பகுதியில் புதிதாக ரேஷன் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.