உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெருக்கரணையில் மாற்று இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்

பெருக்கரணையில் மாற்று இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே உள்ள பெருக்கரணை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் , வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், அச்சிறுப்பாக்கம் சாலை சந்திப்பு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்து கின்றனர்.மேலும் பெருக்கரணையில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பேருந்து மூலம் வந்து செல்கின்றனர்.பயணியர் வசதிக்காக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு நிழற்குடை அமைக்கப்பட்டது. பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் நிழற்குடை சேதமடைந்தது, ஆகையால் மழை மற்றும் வெயில் நேரத்தில் நிழற்குடையில் நிற்க முடியாமல் பயணியர் சிரமப்பட்டு வந்தனர்.புதிய நிழற்குடை அமைக்க பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், செய்யூர் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 8 லட்ச ரூபாய் மதிப்பில், புதிய நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜன., மாதம் அடித்தளம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைய தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மின்மாற்றி சேதமடைந்து உள்ளதால், நிழற்குடை மீது மின்மாற்றி சாய்ந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.ஆகையால் மாற்று இடத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது வரை நிலம் தேர்வு செய்யப்பட்டு, நிழற்குடை அமைக்கும் பணி துவங்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை