வெங்கூர் டாஸ்மாக் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்ற கோரிக்கை
திருப்போரூர்:வெங்கூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால், கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில், வெங்கூர் பகுதியில் சாலையோரம் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்க, மதுபிரியர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள், சாலையில் இடையூறாக தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு, மதுபாட்டில் வாங்க செல்கின்றனர். அதேபோல, எதிர் திசையில் செல்வோரும், திடீரென திரும்பி, டாஸ்மாக் கடைக்கு வருகின்றனர். இதுபோன்ற நேரத்தில், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், இப்பகுதியில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, இந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.