மானாமதி - தாம்பரம் இடையே பஸ் சேவை துவக்க கோரிக்கை
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு, அரசு மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொதுத்துறை, கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை உள்ளன.மானாமதியிலிருந்து திருப்போரூர், திருக்கழுக்குன்றம், ஒரகடம், முள்ளிப்பாக்கம், கொட்டமேடு, செம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலை, இங்கிருந்து பிரிந்து செல்கிறது.மானாமதியைச் சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி அருகே குன்னப்பட்டில், ஜப்பான் சிட்டி தொழில்நகரம் உள்ளது.இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.அதேபோல், மானாமதி உள்ளிட்ட சுற்றுவட்டார பொதுமக்கள், மாணவர்கள், உயர்கல்வி, வேலை நிமித்தமாக கேளம்பாக்கம், புதுப்பாக்கம், மாம்பாக்கம் வழியாக தாம்பரம் வரை செல்கின்றனர். திருப்போரூர் - மானாமதி இடையே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த வனத்துறை சாலையும், 21 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது, தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் வரை தடம் எண் '515பி' மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மானாமதி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், மாணவர்கள் திருப்போரூருக்குச் சென்று, அங்கிருந்து தாம்பரம் பேருந்தில் செல்கின்றனர்.எனவே, மானாமதியில் இருந்து ஆமூர், சிறுதாவூர், திருப்போரூர், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், மாம்பாக்கம், வண்டலுார் வழியாக தாம்பரம் வரை செல்ல, புதிய மாநகர பேருந்து சேவையை தொடங்க வேண்டும். அல்லது தாம்பரத்திலிருந்து திருப்போரூர் வரை வரும் பேருந்தை, மானாமதி வரை நீடிக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.