புத்திரன்கோட்டை பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த புத்திரன்கோட்டையில், கடந்த 20 ஆண்டுகளாக, அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.புத்திரன்கோட்டை, பனையடிவாக்கம் ,தென்னேரிப்பட்டு, பிளாங்குப்பம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள், இங்கு படிக்கின்றனர்.தலைமை ஆசிரியர் உட்பட, 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். புத்திரன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.புத்திரன்கோட்டை உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக, சித்தாமூர், சூணாம்பேடு, மதுராந்தகம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.பேருந்தில் நீண்ட துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், சில மாணவியர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி, கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது வரை நடவடிக்கை இல்லை என, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.ஆகையால், புத்திரன்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.