மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
திருப்போரூர்:கரும்பாக்கத்தில், கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து வடிகால்வாய், நிலப்பரப்பு பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், கரும்பாக்கம் ஊராட்சியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கின. பல இடங்களில், நெற்பயிர்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால், அவற்றை அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: நெல் அறுவடை துவங்க இருந்த நிலையில், பலத்த மழையால் பல இடங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறனர்.