உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

 தையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளன. இந்த ஒன்றியத்தில் ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலை உள்ளிட்ட முக்கிய சாலை சார்ந்த ஊராட்சிகளில், 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளின் எண்ணிக்கை, கட்டடத்தின் பரப்பளவுகளுக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் அமைத்து தருவது, அந்நிறுவனத்தின் கடமை. குறிப்பாக, குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற சட்ட விதிகளும் உள்ளன. ஆனால், சில அடுக்குமாடி குடியிருப்புகளில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது. அந்த வகையில், திருப்போரூர் அருகே ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி தையூர் ஊராட்சியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், குடிநீர் மாசடைந்து வருவதாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எட்டு மாதங்களாக செயல்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சில நேரம் காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை அங்கு வசிப்போர் தெரிவித்துள்ளனர். இது குறித்து, அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் கூறியதாவது: கடந்த 2013 முதல் இங்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை துவங்கியது. அவரவர் சொந்தமாக குடியிருப்புகளை வாங்கினர். 243 வீடுகள் உள்ளன; வீட்டின் உரிமையாளர்கள் வெளிமாநிலம், வெளிநாட்டில் வசிக்கின்றனர். 40 வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு வந்தவர்கள் மட்டும் இங்கு வசிக்கின்றனர். இங்கு தேர்தல் முறையாக நடத்தாததால், ஏற்கனவே இருந்த பொறுப்பாளர்கள் வெளி மாநில, வெளிநாட்டில் வசித்து இதை பராமரிப்பதால், இங்கிருக்கும் பிரச்னைகள் தெரிவதில்லை. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படவில்லை. காலி இடத்தில் கழிவுநீர் விடப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மாசடைந்த குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ