அணுசக்தி தொழில் வளாக சாலை குப்பையால் நோய் பரவும் அபாயம்
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியம் - அணுசக்தி தொழில் வளாகம் இடையே, 2 கி.மீ., நீள பிரதான சாலை உள்ளது.அணுசக்தி துறையினர், நகரிய குடியிருப்பு பகுதியிலிருந்து, அணுசக்தி தொழில் வளாகம் சென்று திரும்புகின்றனர். சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதியினரும், பல்வேறு தேவைகளுக்காக செல்கின்றனர்.சதுரங்கப்பட்டினம், மெய்யூர் ஆகிய பகுதிகளில், சாலையை ஒட்டி, பல ஆண்டுகளாக குப்பை குவிக்கப்பட்டு, சுகாதார சீர்கேடு, துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் என, அபாய சூழலுடன் உள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியில் வசிக்கும் அணுசக்தி துறையினர், இப்பகுதியை கடந்து செல்லும்போது, கடும் துர்நாற்றத்தால் முகம் சுளிக்கின்றனர். ஆரம்ப சுகாதார மையம் வரை வீசும் துர்நாற்றத்தால், சிகிச்சை பெற வருவோர் திணறுகின்றனர்.குப்பையில் இரை தேட ஆடு, மாடு, நாய் ஆகியவை குவிகின்றன. அவை, சாலையில் அடிக்கடி குறுக்கிடுவதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.அதனால், இருசக்கர வாகன பயணியர் தடுமாறி கவிழ்ந்து காயமடைகின்றனர். வட்டார வளர்ச்சி நிர்வாகம், அணுசக்தி துறையுடன் இணைந்து, சாலை பகுதியை குப்பையின்றி பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.