சாலையோரம் குப்பை குவிப்பு மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
மதுராந்தகம். துராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.அதில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மதுராந்தகம் நகர் பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலை ஓரம் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், இறைச்சி, மருத்துவ கழிவுகள், காய்கறி கழிவுகள் மற்றும் உணவகங்களின் கழிவுகள் கொட்டப்படுகின்றன.வளர்ப்பு பன்றிகள், தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள் அவற்றை உண்பதற்காக, அப்பகுதியில் உலா வருகின்றன.மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, புறவழிச் சாலை வழியாக திண்டிவனம் மார்க்கமாகவும், செங்கல்பட்டு மார்க்கத்திலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பேருந்தில் பயணம் செய்யும் பயணியர், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், மிகுந்த அவதியடைகின்றனர்.அதனால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்பட்டு தவிக்கின்றனர்.அதனால், பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர், சொந்த வாகனங்களில் செல்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.மழை நீரில் தேங்கியுள்ள கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மேலும், சாலையை ஆக்கிரமித்து கழிவுநீர் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள 10 டன் அளவுக்கும் அதிகமான குப்பையை முறையாக அகற்றி, 'பிளீச்சிங் பவுடர்' போடவும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் வேண்டும்.இப்பகுதியில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும்.இந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.