உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய ரேஷன் கார்டு வாங்க ரூ.3,000 இ - சேவை மையங்களில் வசூல் வேட்டை

புதிய ரேஷன் கார்டு வாங்க ரூ.3,000 இ - சேவை மையங்களில் வசூல் வேட்டை

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், இ - சேவை மையங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம், தலா, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இங்கு, தலா ஒரு இ - சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, தனியார் இ - சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த இ - சேவை மையங்களில் ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவை கோரி வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்கின்றனர். இந்த மையங்களில், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஆனால், இந்த கட்டணத்தை விட, பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் புதிய ரேஷன் கார்டு கோரி, இ - சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர். அப்போது, புதிய ரேஷன் கார்டு கேட்டு, நீங்கள் அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை. நாங்களே ரேஷன் கார்டு வாங்கித் தருகிறோம் என பேரம் பேசுகின்றனர். அத்துடன், 3,000 ரூபாய் கொடுத்தால், ஒரே மாதத்தில் ரேஷன் கார்டு கிடைக்கும் என, உறுதி அளிக்கின்றனர். இதை நம்பி, ஏராளமானோர் பணம் கொடுத்து ரேஷன் கார்டு வாங்குகின்றனர். இதனால், பணம் கொடுக்க முடியாத மற்றவர்களுக்கு, ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிகளில் உள்ள இ - சேவை மையங்களில், புதிய ரேஷன் கார்டு பெற 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல இ - சேவை மையங்களிலும் வசூல் வேட்டை நடந்து வருகிறது. இ- சேவை மையங்களுக்கு ஆதரவாக, வட்ட வழங்கல் அலுவலர்களும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஏழை மக்கள் ரேஷன் கார்டு பெற முடியாமல், திண்டாடி வருகின்றனர். எனவே, இ - சேவை மையங்களில் உயரதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, பணம் பெற்றுக் கொண்டு விரைவாக புதிய ரேஷன் கார்டு வழங்குவோர் மீதும், இதற்கு உடந்தையாக செயல்படும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை