பல்வேறு பணிகளுக்கு ரூ.43 லட்சம் ஒதுக்கீடு
செங்கல்பட்டு:நகராட்சி பகுதியில், கான்கிரீட் சாலை பராமரிப்பு மற்றும் சிறுபாலம் கட்ட 43.2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே.நகர், நத்தம், வேதாசலம் நகர், அனுமந்த புத்தேரி, அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 33 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில், கான்கிரீட் மற்றும் தார் சாலைகள் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். மழைநீர் வடிகால்வாய், சிறுபாலம் கட்ட வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், நகரவாசிகள் முறையிட்டனர்.இதைத்தொடர்ந்து, பொது நிதி மற்றும் குடிநீர் நிதியில், கான்கிரீட் சாலை பராமரிப்பு பணி செய்ய, 9 லட்சம் ரூபாய், தார்சாலைகளை சீரமைக்க 13.50 லட்சம் ரூபாய், ஜே.சி.கே., நகரில் குறிஞ்சி தெருவிலிருந்து தென்றல் தெரு வரை பிரதான இணைப்பு வடிகால் கட்ட 9.90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.வரதனார் தெருவில், தற்காலிகமாக சாலையை சீரமைக்க 2.50 லட்சம் ரூபாய், குண்டூர் பகுதியில் புதிய பாலம் அமைக்க 3.30 லட்சம் ரூபாய், அண்ணாநகர் 9வது குறுக்கு தெருவில் சிறு பாலம் மற்றும் மழைநீர் வடிகால் கட்ட 9.50 லட்சம் ரூபாய் என, மொத்தம் 43.2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை செயல்படுத்த, நகரமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.