உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.60 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கூறுபோட்டு விற்பனை... அதிர்ச்சி :கலெக்டர் மீட்டு தர ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்

ரூ.60 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கூறுபோட்டு விற்பனை... அதிர்ச்சி :கலெக்டர் மீட்டு தர ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜூலை 7-- வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரி ஊராட்சியில், பூங்காக்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட, 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4.5 ஏக்கர் பரப்புள்ள திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் எனும் ஓ.எஸ்.ஆர்., நிலங்கள், தனியார் வசம் உள்ளன. மாவட்ட கலெக்டர் இந்த நிலங்களை மீட்டு, பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை வலியுறுத்தி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரி ஊராட்சியில், 9 வார்டுகளில், 120 தெருக்கள் உள்ளன.தவிர, 200 ஏக்கர் பரப்புள்ள பெரிய ஏரி, 80 ஏக்கர் பரப்புள்ள சித்தேரி, இரண்டு குளங்கள், நான்கு குட்டைகள், எட்டு பொது கிணறுகள் என, நிலத்தடி நீர்மட்டம் செழிப்பாக உள்ளது.இதுமட்டுமின்றி, மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டமும் நடைமுறையில் உள்ளது.8,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இங்கு புதிய வீடுகள், தனியார் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் தொகையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஆனால், ஊனமாஞ்சேரி ஊராட்சியில், குழந்தைகள் பொழுதுபோக்கவும், பொது மக்கள் நடைபயிற்சி செய்யவும், பூங்காக்கள் இல்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மனைப்பிரிவுகளில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட, 4.5 ஏக்கர் பரப்புள்ள, 'ஓ.எஸ்.ஆர்.,' எனும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது தெரிந்துள்ளது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:வண்டலுார் -- கேளம்பாக்கம் பிரதான சாலை மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு அருகே ஏரி, குளங்களால் சூழப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் வளமாக உள்ளதால், இங்கு நிலம் வாங்கி, புது வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், பொதுமக்கள் பொழுதுபோக்கவும், நடைபயிற்சி செய்யவும் ஒரு பூங்கா கூட இல்லை.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட போது, 'பூங்காக்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் அனைத்தும், தனியார் வசமே உள்ளன. மாவட்ட நிர்வாகம் அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர்.எனவே, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள ஓ.எஸ்.ஆர்., நிலங்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீட்டு, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த 1980 -- 89 மற்றும் 1990 -- 96 ஆகிய ஆண்டுகளில், ஊனமாஞ்சேரியில் வசந்தபுரம் மற்றும் வசந்தபுரம் விரிவு - 1, சந்திராபுரம் 1, 2, 3,4, சக்கரவர்த்தி நகர் - 1, மனோகர் நகர் உட்பட பல மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.இந்த மனைப் பிரிவுகளில் பூங்கா அமைக்க, 4.5 ஏக்கர் பரப்புள்ள, 'ஓ.எஸ்.ஆர்.,' எனும் திறந்தவெளி நிலங்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்டன.இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன், ஓ.எஸ்.ஆர்., நிலம் அருகே மனை வாங்கி வீடு கட்டியவர்கள், 'ஓ.எஸ்.ஆர்.,' நிலத்தையும் மெல்ல மெல்ல தங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, ஒரு கட்டத்தில் அதற்கு பட்டாவும் வாங்கி விட்டனர்.பகுதிவாசிகள் தொடர் கோரிக்கையால், இப்போது பூங்கா அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்னெடுப்புகளை துவக்கி உள்ள நிலையில், 'ஓ.எஸ்.ஆர்.,' நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள், அவை தங்கள் இடம் எனக் கூறி, இடத்தைத் தர மறுக்கின்றனர்.எனவே, ஊனமாஞ்சேரியில் உள்ள ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் எவை என்ற விபரத்தை, மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.தவிர, ஓ.எஸ்.ஆர்., நிலங்களுக்கு வழங்கப்பட்ட தனிநபர் பட்டாக்களை ரத்து செய்து, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிலத்தின் மதிப்பு அதிகரிப்பு

ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் எவை என்பதைக் கண்டறிய, வீட்டு மனை பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களின் மூல பத்திரம் தேவை. இது ஊராட்சி வசம் இல்லை. மாவட்ட நிர்வாகம் வசம் உள்ளது.இதனால், ஊராட்சி சார்பில் ஓ.எஸ்.ஆர்., நிலங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மூல பத்திரங்களை வைத்து, ஓ.எஸ்.ஆர்., நிலங்களை கண்டறிய, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவிர, ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் வழங்கப்பட்ட போது, அதற்கான பட்டா ஊராட்சி பெயரில் மாற்றப்படவில்லை. நிலத்தை வழங்கிய மனைப்பிரிவு உரிமையாளர்கள் பெயரிலேயே இப்போதும் பட்டா உள்ளது.கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்ட பின், இங்கு நிலத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துவிட்டது. மொத்தமுள்ள ஓ.எஸ்.ஆர்., நிலங்களின் தற்போதைய மதிப்பு, 60 கோடி ரூபாய்.இதனால், ஓ.எஸ்.ஆர்., நிலத்தின் பட்டாவை தங்கள் பெயரில் வைத்துள்ள மனைப்பிரிவு உரிமையாளர்கள், தற்போது பகுதி பகுதியாக நிலத்தை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் இதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட 4.5 ஏக்கர் பரப்பு நிலமும் காணாமல் போய்விடும்.இவ்வாறு ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !