உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிராக்டரில் டிப்பர் லாரி மோதி துாய்மை பணியாளர்கள் படுகாயம்

டிராக்டரில் டிப்பர் லாரி மோதி துாய்மை பணியாளர்கள் படுகாயம்

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், குப்பை அள்ளும் டிராக்டரில் டிப்பர் லாரி மோதிய விபத்தில், துாய்மை பணியாளர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். மதுராந்தகம் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக மதுராந்தகம், தண்டலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், 44, மதுராந்தகம் காந்தி நகரைச் சேர்ந்த சரஸ்வதி, 40, சுகுணா, 43, மற்றும் மோச்சேரியைச் சேர்ந்த அமுதா, 50, ஆகியோர் துாய்மை பணி செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று, மதுராந்தகம் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில், குப்பை அள்ளும் டிராக்டர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு, துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து சிமென்ட் கல் ஏற்றிக்கொண்டு, டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. இதை, மாம்பாக்கத்தில் தங்கி வேலை செய்து வரும், ராஜஸ்தானைச் சேர்ந்த திரேந்திரா, 30, என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி, குப்பை அள்ளும் டிராக்டர் வாகனத்தின் பின்பக்கம் மோதியுள்ளது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர்கள் நால்வர், லாரி ஓட்டுநர் உட்பட ஐவர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் போலீசார், லேசான காயமடைந்த லாரி ஓட்டுநர் திரேந்திரா, துாய்மை பணியாளர்களான சுகுணா, சரஸ்வதி ஆகியோரை, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயமடைந்த சீனிவாசன் மற்றும் அமுதா ஆகியோரை, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ