உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிற்ப கல்லுாரி பராமரிப்பு ரூ.1 கோடியில் பணி துவக்கம்

சிற்ப கல்லுாரி பராமரிப்பு ரூ.1 கோடியில் பணி துவக்கம்

மாமல்லபுரம், மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி பராமரிப்பிற்கு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.தமிழக கலை, பண்பாட்டுத் துறையின் கீழ், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது. கடந்த 1957ல் தொழில், வணிக துறையின் கீழ், சிற்ப பயிலகமாக துவக்கப்பட்டு, 1970ல் கல்லுாரியாக தரம் உயர்ந்தது.மரபு கட்டடக் கலை, மரபு சிற்பக்கலையில் கல், உலோகம், மரம், சுதை ஆகிய சிற்பக்கலை, மரபு வண்ணம் மற்றும் ஓவியம் ஆகிய நான்காண்டு பட்டப் படிப்புகள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.ஆசியாவின் ஒரே மரபுக்கலைகள் கல்லுாரியான இங்கு, வகுப்பறை கட்டடங்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, நீண்ட காலமாக பராமரிப்பின்றி சீரழிந்துள்ளன. மாணவ - மாணவியருக்கு, போதிய அடிப்படை வசதிகள் இல்லை. விடுதி கட்டடமும் சீரழிந்துள்ளது. விரிவுரையாளர், பயிற்றுனர் என ஏராளமானோர், பல ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற நிலையில், மீண்டும் நியமிக்கப்படாமல், 60க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.இத்தகைய சீரழிவு அவலம் குறித்து, கடந்த மாதம் நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியிடப்பட்டது.தற்போது கட்டட பராமரிப்பு, அடிப்படை வசதிகள் ஆகியவற்றுக்காக, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் துவக்கப்பட்டு உள்ளதாக, கல்லுாரி பொறுப்பு முதல்வர் ராமன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ