உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆப்பூரில் பயன்பாட்டிற்கு திறப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆப்பூரில் பயன்பாட்டிற்கு திறப்பு

மறைமலை நகர்:ஆப்பூரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சி தாலிமங்கலம் கிராமத்தில், தேசிய கிராம நகர திட்டத்தின் கீழ், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. புறநகர் பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் மற்றும் மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதிகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை, இங்கு கொண்டுவந்து சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், நேற்று இந்த சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, இங்குள்ள மரக்கன்றுகளுக்கு விடப்படும். மீதமுள்ளவை இயற்கை உரமாகவும் மாற்றப்படும். இதற்கு, டேங்கர் லாரி உரிமையாளர்களிடம், ஒரு லோடுக்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ரசாயன கழிவுகளை இங்கு சுத்திகரிப்பு செய்ய முடியாது. மனித கழிவுகளை மட்டுமே சுத்தி கரிப்பு செய்ய முடியும். டேங்கர் லாரிகளில் வரும் கழிவுநீரை சோதனை செய்த பின்னரே, லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும். இனி, காப்புக்காடுகள், சாலையோரத்தில் கழிவுநீரை ஊற்றிவிட்டுச் செல்லும் லாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை