ஒத்தியம்பாக்கத்தில் நாளை துப்பாக்கி சுடும் போட்டி துவக்கம்
செங்கல்பட்டு:அகில இந்திய போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி நாளை 17ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் துவங்குகிறது. இதில், 30 மாநிலங்களைச் சேர்ந்த 634 போலீஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.இந்திய அளவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள போலீசார் இடையே, கடந்த 24 ஆண்டுகளாக, துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வருகிறது. இருபாலருக்குமான இப்போட்டியில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர் வரை பங்கேற்று, தங்கள் திறமையை நிரூபித்து, பதக்கங்கள் பெறுகின்றனர்.நடப்பாண்டும் தமிழக காவல்துறை இந்தப் போட்டியை நடத்துகிறது.அதன்படி, அகில இந்திய காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், குமுளி ஊராட்சி, ஒத்தியம்பாக்கத்தில் நாளை துவங்குகிறது. போட்டி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது.காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாளை துவங்கும் துப்பாக்கி சுடும் போட்டியை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் துவக்கி வைக்கிறார். போட்டியில், 30 மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் பங்கேற்கின்றனர். இதில், ஆண்களில் 550 வீரர்களும், பெண்களில் 84 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். பங்கேற்கும் போலீஸ் வீரர்கள் தங்குவதற்காக, உணவு உபசரிப்புடன், ஊனமாஞ்சேரியில் உள்ள, தமிழ்நாடு காவல் பயிற்சி மையத்தில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியை காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை.இறுதி நாள் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.