ரூ.10 லட்சத்துடன் மாயமான சிவகங்கை நபர் பிடிபட்டார்
சென்னை, : திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நஸ்ருதீன், 43; தொழிலதிபர். இவருக்கு, தொழில் முறையில் பழக்கமான சுதன் என்பவர் வாயிலாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் பழக்கமானார்.கடந்தாண்டு, 'நகைகள் அடமானத்தில் உள்ளதாகவும், அவற்றை மீட்க உதவி செய்யும்படியும்' முகமது நஸ்ருதீனிடம் சங்கர் கோரியுள்ளார். சங்கருக்கு உதவுவதற்காக, 10 லட்சம் ரூபாயுடன் கடந்த அக்., 8ம் தேதி நஸ்ருதீன் சென்னை வந்துள்ளார். அவரை, அண்ணாசாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு அழைத்துச் சென்ற சங்கர், வெளியே நிற்க வைத்துள்ளார்.'உள்ளே தனக்கு தெரிந்த வழக்கறிஞர் இருக்கிறார்; அவரிடம் நோட்டரி கையெழுத்து வாங்கி வருகிறேன்' எனக் கூறி சென்றவர், 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து, அண்ணாசாலை போலீசார் விசாரித்தனர்.இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், 37, என்பவர், மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், 50,000 ரூபாய், ஐ - போன் உட்பட மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.