உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சமூக நலக்கூடம் கட்டுமான பணி மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

 சமூக நலக்கூடம் கட்டுமான பணி மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

செங்கல்பட்டு: மேலமையூர் என்.ஜி.ஜி.ஓ., நகரில், சமூக நலக்கூடம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், மேலமையூர் ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., நகரில் சமூகநலக் கூடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன் பின், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சமூக நலக்கூடம் கட்ட திட்டமிடப்பட்டது. இப்பணிக்கு, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டருக்கு 2023ம் ஆண்டு, அக்., 14ம் தேதி பரிந்துரை செய்தார். அதன் பின், சமூக நலக்கூடம் கட்ட நிர்வாக அனுமதி அளித்து, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, அப்போதைய கலெக்டர் அருண்ராஜ், கடந்த ஏப்., 4ம் தேதி உத்தரவிட்டார். மேலும், பணிகளை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், கடந்த ஜூலை மாதம் முடித்திருக்க வேண்டிய பணிகளை, ஒப்பந்ததாரர் தாமதமாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஏழை மக்களின் நலன் கருதி, பணிகளை விரைவாக முடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ