முடிச்சூர் வெள்ள பாதிப்புக்கு தீர்வு ரூ.1.43 கோடியில் புதிய கால்வாய்
முடிச்சூர், முடிச்சூர் ஊராட்சி இந்திரா நகரில், மழையின் போது வெள்ளம் தேங்குவதை தடுக்க, 1.43 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் கட்டும் பணி, நேற்று துவங்கியது. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் அடங்கிய இந்திரா நகர் பகுதி, ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. பெருங்களத்துார் - முடிச்சூர் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், அடையாறு ஆற்றுக்கு செல்ல முறையாக கால்வாய் வசதி இல்லாததே, இதற்கு காரணமாக இருந்தது. பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வாக, இந்திரா நகரில் இருந்து புறவழிச்சாலை வரை, 1.43 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் கட்டும் பணிக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார். இக்கால்வாய், 3 - 6 அடி அகலம், 5 அடி உயரம் உடையவை. மூன்று மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். கால்வாய் கட்டிய பின், மழைநீர் இதன் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, 'நேதாஜி நகர், மேற்கு லட்சுமி நகர் பகுதிகளிலும், வெள்ள பாதிப்பை தடுக்க கால்வாய் கட்ட வேண்டும் என, அப்பகுதிகளில் வசிப்போர் விடுத்த கோரிக்கைக்கு, ஐந்து கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் நிதி கிடைத்துவிடும். அதன்பின், இப்பகுதிகளில் கால்வாய் கட்டப்படும்' என, எம்.எல்.ஏ., பதிலளித்தார்.