சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அறிவிப்பு வெளியாச்சு... பணி என்னாச்சு? 8 மாதங்களாக காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில், செய்யூர் - போளூர் இடையே, 110 கி.மீ., நீள நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை சென்னை -- கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் வாயிலாக, 603 கோடி ரூபாய் மதிப்பில் இருவழித்தடமாக மாற்றப்பட்டு வருகிறது.இச்சாலை வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சோத்துப்பாக்கம் - சித்தாமூர் இடையே உள்ள சாலையில் சென்னை - விழுப்புரம் ரயில் தடத்தை கடக்கும் ரயில்வே கேட் உள்ளது.சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும், இந்த வழியாகவே செல்லும். காலை, மாலை நேரங்களில் தொடர்ச்சியாக ரயில்கள் செல்வதால், அடிக்கடி சோத்துப்பாக்கத்தில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுகிறது.இதனால், ரயில்வே கேட்டை கடந்து செல்ல 20,30 நிமிடங்கள் ஆவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், சாலையில் காத்திருக்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இப்பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், இந்தியா முழுதும் ரயில்வே மேம்பாலம் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளுக்கான துவக்க விழாவை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதில், சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பால பணியும் அடங்கியுள்ளது.ஆனால், துவக்கி வைத்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில், சோத்துப்பாக்கம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, தற்போது வரை துவக்கப்படாமல் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து துவக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.