உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழங்குடியினருக்கு அச்சிறுபாக்கத்தில் சிறப்பு முகாம்

பழங்குடியினருக்கு அச்சிறுபாக்கத்தில் சிறப்பு முகாம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தொல்குடி திட்டம் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம், நேற்று நடந்தது.அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு 59 ஊராட்சிகள் உள்ளன.இதில் பெரும்பேர் கண்டிகை, சீதாபுரம், எல்.எண்டத்துார், அனந்தமங்கலம், பாப்பநல்லுார், கோழியாளம், தீட்டாளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில், ஐநுாறுக்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற, ஆதார் அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி தவித்து வந்தனர்.இதனால், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுந்தர் முன்னிலையில், தனி வட்டாட்சியர் ராஜா மற்றும் அச்சிறுபாக்கம் வருவாய் அலுவலர் ஆகியோர் பங்கேற்று, தொல்குடி திட்டம் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடத்தினர்.இதில், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகள் ஊதியம், முதியோர் உதவித்தொகை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் நேற்று நடந்தன.அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழங்குடியின மக்கள் முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை