செங்கையில் உழவரைத் தேடி சிறப்பு முகாம் துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சியில், 'உழவரைத் தேடி' சிறப்பு முகாமை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் உள்ள மாணிக்கமங்கலம் கிராமத்தில், நேற்று துவக்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து, திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த முகாம்களில், வேளாண்மை விரிவாக்க சேவைகள் உழவர்களுக்கு, அவர்களின் கிராமத்திற்கு சென்று வழங்கப்பட உள்ளன. அரசு திட்டங்கள் விரைவாக உழவர்களை சென்றடைய, 15 நாட்களுக்கு ஒரு முறை, 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில், வட்டாரங்களில் உள்ள இரு கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களில், 636 வருவாய் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அச்சிறுபாக்கம் வட்டாரத்தில் ஒரத்தி, மதுராந்தகம் வட்டாரத்தில் மெய்யூர், சித்தாமூர் வட்டாரத்தில் அகரம், பவுஞ்சூர் வட்டாரத்தில் அணைக்கட்டு பகுதிகளில் உழவரைத் தேடி முகாம் நடந்தது.திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் தாத்தளூர், காட்டாங்கொளத்துார் வட்டாரத்தில் ஒழலுார் ஆகிய கிராமங்களில், உழவரைத் தேடி சிறப்பு முகாம், வேளாண்மைத்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்தது.இதில், விவசாயிகள் பங்கேற்றனர்.