வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செங்கையில் 7 தொகுதிகளில் துவக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நேற்று துவங்கி, டிச., 4ம் தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நேற்று துவக்கினர். இப்பணி, வரும் டிச., 4ம் தேதி வரை நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல், வரும் டிச., 9ம் தேதி வெளியிடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதியில் உள்ள, 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்களுக்கு, 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களின் இரு பிரதிகளை வழங்கி வருகின்றனர். இந்த விபரம் விளம்பரம் மூலமாகவும், பாகத்தில் உள்ள முகவர்கள் மூலமாகவும், முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், ஆலப்பாக்கம் ஊராட்சியில் வேதநாராயணபுரம் கிராமத்தில், வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணியில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் ஈடுபட்டனர். கலெக்டர் சினேகா, நேற்று இதை ஆய்வு செய்தார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். கட்டணமில்லா தொலைபேசி எண், 1950, மாவட்ட தேர்தல் அலுவலகம், 044-29541715. l திருக்கழுக்குன்றம் தாலுகாவில், திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட 124 ஓட்டுச்சாவடி, செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட 64 என, மொத்தம் 184 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தேர்தல் கமிஷனர் உத்தரவின்படி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அவரவர் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று படிவம் வழங்கினர். திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன், இப்பணியை ஆய்வு செய்தார். ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பகுதிக்கும், முதல்கட்டமாக தலா 200 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் அலுவலக உதவி மைய எண்கள் விபரம் சட்டசபை தொகுதி தொலைபேசி எண் சோழிங்கநல்லுார் 702450 பல்லாவரம் 444498 தாம்பரம் 415483 செங்கல்பட்டு 445500 திருப்போரூர் 319534 செய்யூர்-தனி 228255 மதுராந்தகம்-தனி 231642