குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
சென்னை:பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, 784 பெண் போலீசாருக்கு அளிக்கப்பட்ட, மூன்று நாள் சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு பெற்றது.தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையகம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி, கடந்த 14ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இதில் சென்னை, தாம்பரம், ஆவடி உட்பட, தமிழக காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த சிறப்பு பெண் உதவி ஆய்வாளர்கள், பெண் போலீசார் என, மொத்தம் 784 பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சியில் பெண்கள், குழந்தைகளுக்கான சட்டங்கள், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், புலனாய்வு நுட்பங்கள், சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை உள்ளிட்ட, பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தவிர உடல், மனதை வலுப்படுத்தும் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. நிறைவு நாளில், காவல் பயிற்சி மைய தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று, பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.