ஆண்கள் பூப்பந்து போட்டி ஈரோடு அணி சாம்பியன்
திருவொற்றியூர், மாநில அளவிலான ஆண்கள் பூப்பந்து போட்டியில், ஈரோடு எஸ்.பி.பி.சி., அணி, சாம்பியன் பட்டம் வென்றது.திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் சார்பில், இரண்டு சீனியர் உட்பட ஐவர் பங்கேற்கும், ஆலிஸ் வேதமாணிக்கம் மூன்றாம் ஆண்டு நினைவு கோப்பைக்கான, மாநில ஆண்கள் பூப்பந்துப் போட்டிகள், 21, 22ம் ஆகிய தேதிகளில் நடந்தன. சென்னை, காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன.ஐந்து அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறின. விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், சென்னை ஸ்பார்டன்ஸ் அணியை, 35 - 27, 33 - 35, 35 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, ஈரோடு எஸ்.பி.பி.சி., சவக்காட்டு பாளையம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாவது இடத்தை, திண்டுக்கல் - ஏ.ஆர்., மருத்துவமனை தாடிகொம்பு அணியும், நான்காவது இடத்தை, ஜோலார்பேட்டை ஜே.பி.பி.சி., அணியும், ஐந்தாவது இடத்தை டி.பி.பி.சி., திருவொற்றியூர் அணியும் பிடித்தன.முதலிடம் பிடித்த ஈரோடு அணிக்கு, 25,000 ரூபாய் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. அடுத்தடுத்த இடங்களை பிடித்த அணிகளுக்கு, முறையே, 20,000, 15,000, 10,000 மற்றும் 8,000 ரூபாயுடன் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈரோடு அணியின் கதிரேசன், சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் கோகுல கிருஷ்ணன், திருவொற்றியூர் அணியின் கபிலன் ஆகியோருக்கு, சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் பூப்பந்தாட்ட கழக தலைவர் மதியழகன், செயலர் எழிலரசன் மற்றும் கோட்டீஸ்வரன், ஆசைதம்பி உட்பட பலரும் பங்கேற்றனர்.