மாநில கூடைப்பந்து, பால் பேட்மின்டன் போட்டி ஹிந்துஸ்தான், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி சாம்பியன்
சென்னை, :பி.எஸ்.அப்துல் ரகுமான் கிரசன்ட் பல்கலையின் உடற்கல்வியல் துறை சார்பில், நிறுவனர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள், வண்டலுார், மேலக்கோட்டையூரில் உள்ள பல்கலையில், நேற்று முன்தினம் நிறைவடைந்தன.இதில், ஆண்களுக்கான கால்பந்து மற்றும் கூடைப்பந்து, இருபாலருக்கான பால் பேட்மின்டன் ஆகிய மூன்று போட்டிகள், இரண்டு நாட்கள் நடந்தன.கால்பந்தில் 24 அணிகளும், கூடைப்பந்தில் 16 அணிகளும், பால் பேட்மின்டனில் ஆண்களில் 16, பெண்களில் 12 அணிகளும் பங்கேற்றன.கால்பந்து இறுதிப் போட்டியில், ஆவடி நசரேத்கல்லுாரி அணி, 3 - 0 என்ற கணக்கில் கிரசன்ட் பல்கலையை வீழ்த்தி, முதல் இடத்தை தட்டிச்சென்றது. கூடைப்பந்து போட்டியில், ஹிந்துஸ்தான் மற்றும் செட்டிநாடு கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், ஹிந்துஸ்தான் கல்லுாரி அணி, 54 - 38 என்ற புள்ளி கணக்கில், ஹிந்துஸ்தான் கல்லுாரி வெற்றி பெற்றது.பால் பேட்மின்டன் போட்டியில், ஆண்களில் எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தையும், செயின்ட் ஜோசப் கல்லுாரி இரண்டாமிடத்தையும் பிடித்தன.பெண்களில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி முதலிடத்தையும், எத்திராஜ் கல்லுாரி இரண்டாமிடத்தையும் கைப்பற்றின.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கிரசன்ட் பல்கலை மேலாண்மை குழு உறுப்பினர் சயத் முகமது புகாரி பரிசுகளை வழங்கினார்.