உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊனமாஞ்சேரியில் செயல்படும் கல் அரவை ஆலைகளால்... ஆபத்து: துாசி பரவுவதால் சுற்றுப்பகுதி கிராம மக்கள் தவிப்பு

ஊனமாஞ்சேரியில் செயல்படும் கல் அரவை ஆலைகளால்... ஆபத்து: துாசி பரவுவதால் சுற்றுப்பகுதி கிராம மக்கள் தவிப்பு

ஊனமாஞ்சேரி:ஊனமாஞ்சேரியில் இயங்கி வரும் 80க்கும் மேற்பட்ட கல் அரவை ஆலைகளால், 3 கி.மீ., துாரத்திற்கு துாசி படர்ந்து, சுற்றுப்பகுதி கிராம மக்கள் சுவாச கோளாறு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் -- கேளம்பாக்கம் பிரதான சாலையிலிருந்து, நல்லம்பாக்கம் ஊராட்சிக்குச் செல்லும் வழித்தடத்தில், ஊனமாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில், 80க்கும் மேற்பட்ட கல் அரவை ஆலைகள் இயங்கி வருகின்றன. தவிர, தார் கலவை தயாரிப்பு ஆலைகள், கான்கிரீட் கற்கள் தயார் செய்யும் ஆலைகளும், சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. கல் அரவை ஆலைகளில் பாறைகளை உடைத்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் ஜல்லி, 'எம் - சாண்ட்' மணல் உள்ளிட்டவை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு, 'டாரஸ்' லாரிகள் மூலமாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில், தினமும் 500க்கும் மேற்பட்ட, 'டாரஸ்' லாரிகள் இங்கு வந்து ஜல்லி, எம் - சாண்ட் மணல் உள்ளிட்டவற்றை விதிமுறைகளை மீறி, அதிக அளவில் ஏற்றிச் செல்வதால், சாலையில் புழுதி பறக்கிறது. இந்த புழுதி 3 கி.மீ., வரை பரவுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தவிர, இங்கு இயங்கும் கல் அரவை ஆலைகள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை எனவும், சமூக ஆர்வலர்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊனமாஞ்சேரி அருகே நல்லம்பாக்கம் கூட்ரோடு முதல் நல்லம்பாக்கம் ஊராட்சி இடையேயான பகுதியில், 1,000 ஏக்கர் பரப்புள்ள வனப்பகுதியில், 80க்கும் மேற்பட்ட கல் அரவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த இடம், ஊனமாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சர்வே எண்ணில் இடம் பெற்றுள்ளது. இதுபோல் நல்லம்பாக்கம், கீரப்பாக்கம் பகுதியிலும் சில கல் அரவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலானவை, சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. தவிர, இயந்திரங்கள் வாயிலாக பாறைகளை உடைத்து நொறுக்கும் போது, சட்ட விதிமுறைகளை இந்த ஆலைகள் பின்பற்றுவதில்லை. தண்ணீர் ஊற்றாமல், திறந்தவெளியில் பாறை கற்களை நொறுக்கி கற்கள், ஜல்லி கற்கள், எம் - சாண்ட் மணல் ஆகியவற்றை தயாரிப்பதால், கரும்புகையுடன் நச்சுத்தன்மை கலந்த வாயு, தொடர்ந்து வெளியேறுகிறது. இதனால், அருகிலுள்ள ஊனமாஞ்சேரி, கொளப்பாக்கம், நெடுங்குன்றம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், சுவாச கோளாறு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கல் அரவை ஆலைகள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். அத்துடன், இந்த கல் அரவை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. இதனால், கல் அரவை இயந்திரங்களில் சிக்கி, தொழிலாளர்கள் காயமடைவதும் அடிக்கடி நடக்கிறது. இந்த ஆலைகளைச் சுற்றியும், தமிழக அரசின் காப்புக்காடு உள்ளது. ஆலைகளில் வெளியேறும் துாசி, நச்சுப்புகை காப்புக்காடுகளில் படர்வதால், அதன் இயல்பு தன்மை கெடுகிறது. தவிர, காடுகளில் வாழும் மான் உள்ளிட்ட வன விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத் துறை விதிப்படி, 18 டன் எடைக்கு மேல், லாரிகளில் கனிமங்களை ஏற்றிச் செல்லக்கூடாது. ஆனால், இங்கு வந்து செல்லும் டாரஸ் லாரிகளில், 60 டன்னுக்கு மேல் பாறை கற்கள், ஜல்லி கற்கள், எம் - சாண்ட், பி - சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இந்த கல் அரவை ஆலைகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பலவிதங்களில் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு தலையிட்டு, கல் அரவை ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். வரி செலுத்துவதில்லை நல்லம்பாக்கம் கூட்ரோடு முதல் நல்லம்பாக்கம் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, 5 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை, 60 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சேதமடைந்து வருகிறது. இங்கு, 80க்கும் மேற்பட்ட கல் அரவை ஆலைகள் இயங்கினாலும், 15 ஆலைகள் மட்டுமே, முறையாக வரி செலுத்தி வருகின்றன. மற்ற ஆலைகள் வரி செலுத்தாமல் இயங்கி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி