வட்டார அளவிலான கபடி பள்ளி மாணவர்கள் அசத்தல்
சித்தாமூர்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என, மொத்தம் 18 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 'நாக் - அவுட்' முறையில் நடந்த போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு இறுதிப் போட்டியில் கடப்பாக்கம் கே.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியினர், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தினர். மேலும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு இறுதிப் போட்டியில், அச்சிறுபாக்கம் மார்வார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினர், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தினர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு இறுதிப் போட்டியில், மொரப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி, தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினர், அடுத்தகட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.