மதுராந்தகம் பழங்குடியின விடுதி மூடப்பட்டதால் மாணவர்கள் அவதி
மதுராந்தகம்,மதுராந்தகம் பழங்குடியினர் விடுதி திடீரென மூடப்பட்டதால், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுராந்தகத்தில் பழங்குடியினர் மாணவர் விடுதி மாம்பாக்கம் சாலையில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன், மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, பெட்ரோல் நிலையம் அருகே உள்ள கட்டடத்தின் முதல் தளத்தில், மாதத் தவணை வாடகை முறையில் இயங்கி வருகிறது. இங்கு, நடப்பு கல்வி ஆண்டில், இந்து மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும், 25 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு, நாள்தோறும் காலை உணவு முடித்த பின், மதிய உணவு தயார் செய்து, பள்ளிக்கு செல்லும் பொழுது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இரவு நேரங்களில் மாணவர்கள் விடுதியில் தங்காததால், இரவு நேர உணவு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம், பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மாணவர் விடுதிக்கு ஆய்வுக்குச் சென்றபோது, விடுதி சமையலர் மற்றும் வார்டன் உள்ளிட்டோர் பணியில் இல்லாமல் இருந்துள்ளனர். மேலும், தற்காலிகமாக இயங்கி வந்த கட்டடம் அருகே பழைய மர சாமான்கள் விற்பனை செய்யும் பகுதியில் செயல்பட்டு வந்ததால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இன்றி உள்ளதாகவும், பணி நேரத்தில் விடுதி வார்டன் மற்றும் சமையலர் ஆகியோர் விடுதியில் இல்லாததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விடுதியும் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால், மாணவர்கள் சிலர் உறவினர்கள் வீட்டில் தங்கி, அங்கிருந்து பள்ளிக்கு வந்து செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். மதியம் உணவு இடைவேளையில், உடன் பயிலும் மாணவர்கள் கொண்டு வரும் உணவுகளை பகிர்ந்து உண்டு வருகின்றனர். தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுராந்தகம் பழங்குடியினர் விடுதியில் தங்கி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக, பள்ளியில் பயிலும் விடுதி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு இன்றி, அவர்களின் உணவு கேள்விக்குறியாக உள்ளது. மதிய உணவு மற்றும் இரவு நேரங்களில் தங்க இடவசதி இன்றி உள்ளதால், அவர்களின் கல்வி கற்கும் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில்,தற்காலிகமாக வாடகை கட்டடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு மாணவர்களின் பசி நீக்கி, கல்வி தொடர, பழங்குடியினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.