புது ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்யாததால் அவதி
திருப்போரூர்:வெங்கலேரியில், புதிதாக துவக்கப்பட்ட ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் துவங்காததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஊராட்சி, வெங்கலேரி கிராமம், இரண்டாவது வார்டில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இயங்கிய ரேஷன் கடை, 40 ஆண்டுகளுக்கு முன் சில காரணங்களால் ஆலத்துார் கிராமத்திற்கு மாற்றப்பட்டது.இதனால், வெங்கலேரி கிராம மக்கள் இரண்டு கி.மீ., துாரம் சென்று, ஓ.எம்.ஆர்., சாலையைக் கடந்து ரேஷன் பொருட்களை வாங்கி, வருவதில் சிரமப்பட்டனர்.எனவே, மீண்டும் ஆலத்துாரில் இயங்கும் ரேஷன் கடையை, வெங்கலேரி கிராமத்திற்கு மாற்ற வேண்டும். புதிதாக சொந்த கட்டடமும் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, 2023- - 24ம் நிதியாண்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 9.77 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.கடந்த 4ம் தேதி, மேற்கண்ட புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. ஆனால், கடைக்கான பொருட்களை இறக்கி, பொதுமக்களுக்கு வழங்கும் முறை துவங்கவில்லை.இந்த ஜூலை மாதம், புதிய ரேஷன் கடையில் சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கலாம் என, பொதுமக்கள் ஆவலுடன் இருந்தனர்.ஆனால், கடைக்கு பொருட்களை வரவழைத்து வழங்காததால், ஏமாற்றம் அடைந்தனர். இதனால், பழையபடி இரண்டு கி.மீ., துாரம் சென்று பொருட்களை வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.எனவே, பொதுமக்கள் நலன் கருதி, புதிய ரேஷன் கடையில் பொருட்களை இறக்கி வினியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.