உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கவுரிவாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க ரூ.14 கோடி ஒதுக்கிய தாம்பரம் மாநகராட்சி

கவுரிவாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க ரூ.14 கோடி ஒதுக்கிய தாம்பரம் மாநகராட்சி

செங்கல்பட்டு:கவுரிவாக்கம் ஏரியை துார் வாரி சீரமைக்க, 14 கோடி ரூபாய் நிதியை, தாம்பரம் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வன அலுவலர் ரவிமீனா உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:கிளாப்பாக்கம் பாசன கால்வாய்கள் துார்ந்துள்ளதால், ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் போது, அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் தண்ணீர் செல்கிறது. இதனால், பாசன கால்வாய்களை துார் வாரி சீரமைக்க வேண்டும். ஈச்சங்கரணை கிராமத்தில், விவசாய நிலங்களில் மின்வடங்கள் தாழ்வாக செல்வதை சீரமைக்க வேண்டும்.மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்பு அரைவை அதிகரிக்க, கரும்பு பயிர் சாகுபடியை அதிகரிக்க வேண்டும். பழையனுார் கிராமத்தில், அதிக அளவிலான மாடுகள் சாலையில் உலா வருகின்றன.இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். படாளம் பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க வேண்டும். பழைய சீவரம் தடுப்பணையிலிருந்து, பாலுார் ஏரிக்குச் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க வேண்டும்.கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும். தாம்பரம் அடுத்த கவுரிவாக்கம் ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் கூறுகையில்,''கவுரிவாக்கம் ஏரியை துார் வாரி சீரமைக்க, தாம்பரம் மாநகராட்சி 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணியை செய்ய, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தப்படும்,'' என்றார்.கூட்டத்தில், மூன்று விவசாயிகள் அளித்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்பட்டது. முன்னதாக, பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ், விலையில்லா 10 கறவை மாடுகளை, விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.ஆயப்பாக்கம் பகுதியில், டாஸ்மாக் கடை அகற்றம், அரசு பேருந்து இயக்கம், வண்டலுார் பகுதியில் பாசான கால்வாய் ஆக்கிரமிப்பு மீட்பு, கவுரிவாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் அருண்ராஜை, விவசாயிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ