தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு: மூவர் தப்பிய வீடியோ பரவுகிறது
அச்சிறுபாக்கம்:சென்னை, மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 52. இவர், கடந்த 22ம் தேதி, சென்னையில் இருந்து இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் நோக்கிச் சென்றார்.இரவு 7:30 மணியளவில், அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு ரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது, செங்கல்பட்டு பகுதியிலிருந்து திண்டிவனம் நோக்கி ஒரு டாரஸ் லாரி, 'டைஸ்ஸ்' கற்கள் ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற லாரியின் பக்கவாட்டில் மோதி, சாலையின் மையத் தடுப்பில் ஏறி நின்றது. உடனே, ஓட்டுநர் தலைமறைவானார்.அதேநேரம், இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மைய தடுப்பைக் கடந்து, மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் முன் பக்கத்தில், லேசாக மோதி நின்றது.அரசு பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்த விபத்தால், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அச்சிறுபாக்கம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.இந்நிலையில், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில், விபத்தில் சிக்கிய லாரிகளின் உரிமையாளர்கள், சமரச பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, டைல்ஸ் கற்கள் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி, அங்கு சாலையோரம் நின்ற மூவர் மீது மோதுவது போல் சென்றதும், அவர்கள் உயிர் தப்பிய காட்சிகளும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இது, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.