மதுராந்தகம் நகராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்றவற்றில் சொத்து வரி பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து, வரி வசூல் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, நகராட்சி அதிகாரிகளால் பலமுறை நோட்டீஸ் அளித்தும், சொத்து வரி பாக்கி செலுத்தாத தனியார் வணிக வளாகம் மற்றும் தனியார் பெட்ரோல் நிலையத்திற்கு,'சீல்' வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.அதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின், பெட்ரோல் பங்க் உரிமையாளர் கேட்டுக்கொண்டதின்படி, நேற்றைய தினமே சொத்து வரி பாக்கியை செலுத்தியதால், சீல் வைக்கும் நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் கைவிட்டனர்.சொத்து வரி பாக்கி செலுத்தாத கடைகள் மற்றும் நிறுவனங்கள், சொத்து வரி பாக்கியை விரைந்து செலுத்த வேண்டும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.