செய்யூரில் 12 இருளர் குடும்பம் வீட்டுமனையின்றி தவிப்பு
செய்யூர், செய்யூர் ஊராட்சியில் சால்ட் ரோடு பகுதியில், கடந்த 2006ம் ஆண்டு, 32 இருளர் குடும்பத்தினர், தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக வீடு கட்டி குடியமர்த்தப்பட்டனர்.தற்போது இப்பகுதியில், 48 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு, புதிதாக வீட்டுமனை வழங்கப்படாததால், பல வீடுகளில் இரண்டு குடும்பங்கள் சேர்ந்து வசித்து வருகின்றனர்.இதனால், போதிய இடவசதி இல்லாமல், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.புதிய வீட்டுமனை வழங்க பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறுகையில்,'இருளர் மக்களுக்கு வீட்டு மனை வழங்க, செய்யூர் பகுதியில் அரசு புறம்போக்கு இடம் இல்லை. அதனால், அருகே உள்ள கிராமங்களில் ஆய்வு செய்து வீட்டுமனை வழங்க வேண்டும்' என்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, செய்யூர் பகுதியில் வீட்டுமனை இல்லாமல் அவதிப்படும் மேற்கண்ட 12 இருளர் குடும்பத்தினருக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.